இந்தியாவில் 62,939 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 2,109 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இதன் பின்னர் கொரோனா மெல்ல மெல்ல நாடு முழுவதும் ஊடுருவி, கடந்த மாதம் 30-ந் தேதிக்குள் 33,610 பேரை பாதிப்புக்கு உள்ளாகியதுடன், 1,075 பேரை உயிரிழக்கவும் செய்தது. இந்தியாவில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த கொரோனா எடுத்துக் கொண்ட காலம் 90 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது கிட்டத்தட்ட இதே அளவு பாதிப்பை கொரோனா கடந்த 10 நாட்களில் ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி இந்த மாதம்(மே) 1-ந் தேதி தொடங்கி நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,329 ஆகும். இந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,034 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் 100 நாட்களில் கொரோனா சுமார் 63 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி, 2,100-க்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது.
இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்துக்குள் 3,277 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 128 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,109 ஆக உயர்ந்துள்ளது. 19,358 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் மொத்த பலி எண்ணிக்கையிலும்(2,109) 779 பேர் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இதன் மூலம் கொரோனாவால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பில் 3-ல் ஒரு பங்கு பாதிப்பு மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த இடங்களில் உள்ள குஜராத்தில் 7,796 பேரும், தமிழகத்தில் 7,204 பேரும், டெல்லியில் 6,542 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.