கொரோனா பாதிப்பு குறையாததால் மத்திய அரசு நடவடிக்கை - மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதல்-மந்திரிகள் கோரிக்கை
பின்னர் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். என்றாலும் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. இதைத்தொடர்ந்து மே 3-ந் தேதி (நாளை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டனர்.
மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை வருகிற 17-ந் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
*பேரழிவு மேலாண்மை சட்டத்தின்படி, 3-ந் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், மிதமாக உள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பு இல்லாத பச்சை ஆகியவற்றில் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த வழிமுறைகளும் பின்பற்றப்படவேண்டும்.
மாநகராட்சி பகுதி
* மாநகராட்சி பகுதி மாவட்டங்களில் வரும் பட்சத்தில், மாநகராட்சி எல்லைக்குள் வரும் பகுதிகளை ஒரு மண்டலமாகவும், அந்த எல்லைக்குள் வராத மாவட்ட பகுதிகளை மற்றொரு மண்டலமாகவும் பிரிக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் 21 நாட்களில் யாருக்கும் புதிதாக நோய்த்தொற்று இல்லை என்றால், அங்கு கூடுதல் பொருளாதார நடவடிக்கைளுக்கு அனுமதி அளிக்கலாம்.
* சிவப்பு மண்டலமும், ஆரஞ்சு மண்டலமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகும். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வாரந்தோறும் வரையறுக்க வேண்டும். இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பகுதியில் தொற்று எந்த நிலையில் இருக்கிறது? யார்-யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? என்பதை அறியமுடியும். அந்த பகுதியில் அவசர மருத்துவ மற்றும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கக்கூடாது.
பஸ் போக்குவரத்து
* புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரெயில், மெட்ரோ ரெயில், விமான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும். ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, டாக்சிகளுக்கும் தடை நீடிக்கும். சலூன்களை திறக்கவும் அனுமதி இல்லை. என்றாலும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.
* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருக்கும். சமூக, அரசியல், கலாசார, மத வழிபாடுகளுக்காக கூடுவதற்கும் அனுமதி கிடையாது.
* சில குறிப்பிட்ட முக்கியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே சாலை, ரெயில், விமான பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
* பச்சை மண்டலத்தில், தடை விதிக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை தவிர பிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு பஸ் டெப்போக்கள் 50 சதவீத பஸ்களை இயக்கலாம். பஸ்களில் பாதி அளவு பயணிகளையே ஏற்றிச் செல்லவேண்டும்.
வெளியே செல்ல கட்டுப்பாடு
* அத்தியாவசிய நடவடிக்கைகளை தவிர வேறு எதற்காகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வெளியே செல்ல கட்டுப்பாடு நீடிக்கும்.
* கொரோனா பாதிப்பு உள்ள அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுகாதார காரணங்களை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும்.
* அனைத்து மண்டலங்களிலும் ஆஸ்பத்திரிகள், வெளிநோயாளிகள் பிரிவு சமூக விலகல் விதிமுறையுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* சிவப்பு மண்டல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே தனி நபர்கள் வெளியே செல்லவும், வாகனங்கள் இயக்கத்துக்கும் அனுமதிக்கப்படும்.
* 4 சக்கர வாகனம் என்றால் டிரைவரை தவிர அதிகபட்சம் 2 பேர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்ல அனுமதி கிடையாது.
* மதுபானம், புகையிலை பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் கடையில் நிற்கக்கூடாது. குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* மதுபானம், புகையிலை பொருட்களை பொது இடங்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது.
கட்டுமான பணிக்கு அனுமதி
* நகர்ப்புறங்களில் கட்டுமானம் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் கிடைத்தால், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
* நகர்ப்புறங்களில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளில் அத்தியாவசியம் அல்லாத பொருட்களின் விற்பனைக்கு அனுமதி கிடையாது. என்றாலும் தனியாக உள்ள கடைகள், குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறந்து இருக்கலாம்.
* ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தமட்டில் சிவப்பு மண்டலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி உண்டு.
* தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* போக்குவரத்து வசதி செய்து கொடுக்கும் நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படலாம். பிற தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சணல், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஷிப்டு முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் துணைச் செயலாளர், அதற்கு மேற்பட்ட அந்தஸ்துள்ள அனைத்து அதிகாரிகளின் முழு அளவிலான வருகையுடனும், 33 சதவீத ஊழியர்கள் வருகையுடனும் இயங்கலாம்.
சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி
* போலீஸ், பாதுகாப்பு துறை, சிறைத்துறை, தீயணைப்பு, சுகாதார மற்றும் குடும்ப நல அலுவலகங்கள் கட்டுப்பாடுகள் இன்றி செயல்படலாம்.
* அனைத்து வகையான சரக்கு போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
* சிவப்பு மண்டலங்களில் அச்சு, மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், கால் சென்டர்கள், குளிர்பதன கிடங்குகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
* ஆரஞ்சு மண்டலத்தில் சிவப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் டாக்சி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் டிரைவருடன் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
* கிராமப்புறங்களில் வேளாண்மை, செங்கல் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.