பிரதமர் மோடி மீது சீதாராம் யெச்சூரி கடும் தாக்கு - “உங்கள் ஆட்சியில் ஜனநாயக பொறுப்புணர்வு இல்லை”

கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயக பொறுப்புணர்வு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கி உள்ளார்.

Update: 2020-04-26 23:15 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

40 நாள் ஊரடங்கின் கடைசி வாரத்துக்குள் நாம் இப்போது நுழைகிறோம். வெறும் 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் தந்து இந்த ஊரடங்கை திடீரென அறிவித்தீர்கள். எனவே இந்த திடீர் ஊரடங்கின் விளைவுகளை சந்திக்க மக்களும், மாநில அரசுகளும் முற்றிலும் தயார் நிலையில் இல்லை.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கால் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. அவர்கள் வாழ்வாதாரத்தையும், தங்கும் இடத்தையும் இழந்து விட்டனர். பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடில்லா நிலைமை தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்து வருகிறது. அனைத்து ஏழைகளுக்கும் இலவச உணவு வழங்க கோரினோம். நமது மத்திய கிடங்கில் ஏராளமான உணவுதானியங்கள் வீணாக போகின்றன. இவை மாநிலங்களுக்கு இலவச வினியோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வேலை இல்லாதோர் எண்ணிக்கை பிப்ரவரி- ஏப்ரல் மாதங்களுக்கு இடையே 340 லட்சத்தில் இருந்து 880 லட்சமாக உயர்ந்து விட்டது. அதாவது கூடுதலாக 540 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் 680 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 12.2 கோடி மக்கள் வேலையையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும்.

பிரதமர் பெயரிலான நிதியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிதியை உடனடியாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

வீண் செலவுகளை அரசு நிறுத்த வேண்டும். மத்திய விஸ்டா போன்ற தேவையற்ற வீணான செலவினங்களை நிறுத்த வேண்டும். பிரதமருக்கு புதிய இல்லம் கட்டும் திட்டம், புல்லட் ரெயில் திட்டம் போன்றவற்றை உடனே நிறுத்தி விட்டு அந்த நிதியை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கொரோனா சோதனையை பொறுத்தமட்டில் உலகிலேயே மிகக்குறைவான நிலை இங்கு உள்ளது. சுகாதார பணியாளர்களுக்கு தேவையான சுய பாதுகாப்பு கருவிகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. போர்க்கால நடவடிக்கையாக இவற்றை கவனிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கவனம் செலுத்துவதால், தொற்று நோயற்ற பிற நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு மருத்துவ கவனிப்பு இல்லை. இதனால் ஏராளமானோர் இறக்கின்றனர். ஊரடங்கால், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள், 3½ லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை. 3 லட்சம் குழந்தைகள் மற்றும் லட்சக்கணக்கான கர்ப்பிணிகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.

பல தெளிவுபடுத்தல்களைத் தொடர்ந்தும் புரிந்து கொள்ள முடியாத உத்தரவுகள் மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன. பின்னர் அந்த உத்தரவுகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது மத்திய அரசுக்கு வழக்கமாகி விட்டது. நாட்டின் அரசியல் தன்மை, திறமையற்ற தன்மையை நிரூபித்து வருகிறது.

நாடும், அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட்டால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போர் வெற்றி பெறும். ஆனால் தப்லிக் ஜமாத் அமைப்பின் பொறுப்பற்ற தன்மையை முழு சிறுபான்மை சமூகத்தையும் குறிவைப்பதற்கும், சமூக பிரிவுகளை ஆழப்படுத்துவதற்கும், வகுப்புவாத பிளவுகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடாது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது வீட்டுக்கு திரும்ப கொண்டு போய் சேர்க்க விமானங்கள் இல்லை என்றாலும், சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மூலமாக இப்போதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க விமானம் அனுப்புவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பிரதமர் அவர்களே, ஊடகங்களை எதிர்கொள்வதற்கும், இந்திய மக்களின் கவலைகளுக்கு பதில் அளிப்பதற்கும் ஒரு தனித்துவமான வெறுப்பை காட்டி இருக்கிறீர்கள். பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகிறார்கள். கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள். பொறுப்பு ஏற்பதற்கும், அரசு தகுதி வாய்ந்ததாகவும், நிலைமைக்கு தகுந்தவாறு வழிநடத்துவதற்கும், மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும் இதுதான் ஒரே வழி.

கேரளாவில் உள்ள இடதுசாரி அரசின் முதல்-மந்திரி, தினசரி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, இந்த சவாலை எதிர்கொள்வதில் மக்களுக்கு தேவையான நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஆனால் உங்கள் ஆளுகையில், இந்த ஜனநாயக பொறுப்புணர்வு முற்றிலுமாக இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்