மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1182 ஆக உயர்வு
மராட்டிய மாநிலம் மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1182 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரான மும்பைக்கு கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளது. அதிவேகம் எடுக்கும் கொரோனாவால் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மும்பையில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் கொடிய தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,182 ஆகி உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை தாண்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,761 ஆக உள்ளது.