2 மந்திரிகளை பெங்களூரு போலீசார் தாக்கி கைது செய்தனர் மத்தியபிரதேச காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

மத்தியபிரதேசத்தை சேர்ந்த 2 மந்திரிகளை பெங்களூரு போலீசார் தாக்கி, கைது செய்துள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. விவேக் தங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-03-12 22:10 GMT
போபால், 

மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. விலகிய 6 மந்திரிகள் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

19 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா ஒரு சொகுசு விடுதியில் சிறைப்பிடித்து வைத்துள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனை பா.ஜனதா மறுத்துவிட்டது.

2 மந்திரிகள் கைது

இதற்கிடையே போபாலில் உள்ள மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி.யும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான விவேக் தங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 19 எம்.எல்.ஏ.க்களில் மனோஜ் சவுத்ரி எம்.எல்.ஏ. தனது தந்தையுடன் போபால் வருவதற்கு தயாராக உள்ளார். இதனால் ஜித்து பட்வாரி, லகான் சிங் ஆகிய 2 மந்திரிகள் மனோஜ் சவுத்ரி எம்.எல்.ஏ.வின் தந்தையுடன் பெங்களூருவுக்கு சென்றனர்.

மனோஜ் சவுத்ரி தனது தந்தையுடன் வர விரும்பியபோதும், அவரை அந்த விடுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் மந்திரிகள் 2 பேரையும் பெங்களூரு போலீசார் தாக்கியுள்ளனர். தாக்கியதுடன் மட்டுமின்றி, 2 மந்திரிகளையும் கைது செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

எல்லைதாண்டிய இந்த பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு விவேக் தங்கா எம்.பி. கூறினார்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்