கொரோனா எதிரொலி: ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை - அமித்ஷா அறிவிப்பு
கொரோனா பாதிப்பு எதிரொலியாக, ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 16 இத்தாலியப் சுற்றுலாப் பயணிகள் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா பரவாமல் தடுக்க கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவிதமான ஹோலி கொண்டாட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி, ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த நிலையில், அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஹோலி இந்தியர்களுக்கான முக்கியமான பண்டிகை என்றாலும், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று குறிப்பிட்டார். மேலும் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குடும்ப நலத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.