ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி

ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 10:00 GMT
புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்திருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த ப.சிதம்பரத்தின் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் வெளிநாடு செல்லக் கூடாது, மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரூ.2 லட்சம் சொந்த ஜாமீன்  தொகையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 106 நாட்கள் திகார் சிறை வாசத்திற்கு பிறகு ப.சிதம்பரம் வெளியில் வர உள்ளார்.

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அவரது மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் என்டி.டி.வி.,க்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில்,

மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம் நாளை காலை 11 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருவார் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம்,  ப.சிதம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை  நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்