370-வது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள் - சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வில் இன்று விசாரணை

370-வது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

Update: 2019-09-30 23:15 GMT
புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இதுதொடர்பான ஜனாதிபதி உத்தரவை செல்லாது என்று அறிவிக்கக்கோரியும், பத்திரிகையாளர்கள் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகளை நீக்கக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தேசிய மாநாட்டு கட்சி, முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் கோபால் பிள்ளை, பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல், ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவை நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நேற்று இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பி வைத்தது. நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியல் சட்ட அமர்வில் இன்று விசாரணை தொடங்குகிறது.

மேலும் செய்திகள்