சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் உறுதி செய்யப்படும் - உத்தவ் தாக்ரே
சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் உறுதி செய்யப்படும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 9-ந் தேதி முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி மராட்டிய சட்டசபைக்கு தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனாவும், பாஜகவும் இணைந்து போட்டியிடும் என்று உத்தவ் தாக்ரே மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜக கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை. நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளின் பங்கீடு குறித்து இரண்டு கட்சிகளும் இணைந்து ஆலோசிக்க உள்ளோம். நாங்கள் பாஜக தலைவர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஓரிரு நாட்களில் நாங்கள் நல்ல முடிவுக்கு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.