70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் திட்டம்

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-04 12:12 GMT
புதுடெல்லி,

பிஎஸ்என்எல் தலைவர் பிரவின் குமார் பர்வார் கூறியதாவது:-

கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. இது காலப்போக்கில் எளிதாக ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் .

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான 68 ஆயிரம் கோபுரங்களில் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை தற்போது மற்ற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இதனை அதிகரித்து இதன் மூலமும் வருவாய் அதிகரிக்க திட்டமிட்டப்பட்டு வருகிறது.

நிறுவனத்தில் மின்சார பயன்பாட்டிற்கான செலவு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக உள்ள நிலையில் மின்சார பயன்பாட்டை 15 சதவீதம் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் பணியில் உள்ளனர்.  ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்