கர்நாடக அரசியல் நெருக்கடி: குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்

குமாரசாமி உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-14 09:43 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதாவது, முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதுபோல் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்றுவிட்டனர். அத்துடன் பா.ஜனதாவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசு பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதைதொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தங்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 16-ந் தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது முதல்-மந்திரி குமாரசாமி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்றும், வாக்கெடுப்புக்கான தேதியை சபாநாயகர் முடிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை தனித்தனி ரெசார்ட் ஓட்டல்களில் தங்க வைத்துள்ளனர். தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணிகளை அக்கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், "காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.  பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள்  கூறியுள்ள நிலையில், முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்