மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்பு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்று கொண்டார்.
புதுடெல்லி,
மகாராஷ்டிராவின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக கடந்த 1989ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்தவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர அரசில் பொதுப்பணி துறை மந்திரியாகவும் இருந்துள்ளார். கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினரானார்.
இதன்பின் மோடி அரசில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கான அமைச்சராகவும் இருந்துள்ளார். அகில பாரதீய வித்யார்தி பரிஷத் அமைப்பின் மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்த கட்கரி, பின் பா.ஜ.க.வின் இளைஞர் அணியில் தன்னை இணைத்து கொண்டார்.
அவர் ஓர் அரசியல்வாதியாக தன்னை நினைக்காமல் அரசியலை சமூக சேவையாக செய்து வருகிறார். ஏழைகள், சமூகம் மற்றும் நசுக்கப்பட்டவர்களுக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார். அவர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய மந்திரியாகவும் இருந்து வருகிறார்.