காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் வருகை
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் வருகை தர துவங்கினர்.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வருகை தர துவங்கியுள்ளனர். தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். இதனால், தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் பதவி விலகலாம் என ஊகங்கள் பரவுகின்றன. இதனால், இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.