நாளை குஜராத் செல்ல இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்

நாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-25 05:07 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். எனினும் இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்.

மேலும் புதிய அரசு அமைப்பது, அந்த அரசில் பங்கேற்கும் மந்திரிகள் யார்? என்பது குறித்தும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். புதிய மந்திரிசபையில் கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட  புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அமித்ஷாவுக்கு  உள்துறை, நிதித்துறை, வெளியுறவுத்துறை, ராணுவம் ஆகிய முக்கிய பொறுப்புகளில் ஏதேனும் ஒன்று அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்துக்கு பிறகு, பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் செல்ல இருக்கிறார். இந்த தகவலை தனது டுவிட்டரில் பகிர்ந்த மோடி கூறியிருப்பதாவது:- “ நாளை மாலை குஜராத் செல்ல இருக்கிறேன். எனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளேன். நாளை மறுநாள் காலை என் மீது நம்பிக்கை காட்டிய வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்த அங்கு செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்