காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்

காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

Update: 2019-05-24 16:12 GMT
2019 தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியை தழுவியது. பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். அதனைதான் செய்து வருகின்றேன் என அவ்வப்போது கூறுவார். இப்போது அதுபோன்ற நிலையைதான் காங்கிரசும் எதிர்க்கொள்கிறது. இத்தேர்தலில் 52 தொகுதிகளில் வென்றுள்ளது. வடமாநிலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பு மிகவும் உயர்வானது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகளிலும் காங்கிரஸ் அதை காப்பாற்றியது, மேலும் அது மனத்தாழ்மையை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தலில் பிரச்சாரம் பிரச்சினைகளின் அடிப்படையில் நடக்கவில்லை, விவசாயிகள் பிரச்சினை, ஏழை மக்களின் பிரச்சினை, கிராமங்களில் உள்ள பிரச்சினை, தலித்களுக்கு உள்ள பிரச்சினை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பதுபற்றி நடக்கவில்லை. 

பா.ஜனதா மக்களின் உணர்ச்சிகளைக் கொண்டு பிரசாரம் மேற்கொண்டது, உண்மையான பிரச்சனையை பேசவில்லை. மத, சாதி, தேசியவாதம் மற்றும் ராணுவம் ஆகியவற்றில் மட்டுமே பா.ஜனதா அரசியலை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சினைகளின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜனதா தன்னுடைய சாதனையை பேசி வாக்கு கேக்கவில்லை. பொய்யை பேசி மக்களை ஆட்டிப்படைத்துள்ளது. அவர்களும் வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். 

காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதாவை தோற்கடித்து 5 மாதங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது 25 தொகுதிகளும் அங்கு பா.ஜனதா வசம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்