அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பா.ஜனதா வேட்பாளர் சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பா.ஜனதா வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார்.
தேர்தலில் இவர் பெற்ற வாக்குகள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 430 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 81 ஆயிரத்து 663 ஆகும். சி.ஆர். பாட்டீல், தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேலை 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோன்று மேலும் 2 பா.ஜனதா வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சஞ்சய் பாட்டியா தன்னை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் சர்மாவை 6 லட்சத்து 54 ஆயிரத்து 269 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். ராஜஸ்தானில் பில்வாரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா, தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராம்பால் சர்மாவை 6 லட்சத்து 10 ஆயிரத்து 920 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.