நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.

Update: 2019-05-24 11:44 GMT
2019 தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றியை தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கூட்டணி 351 இடங்களில் வென்றது. பா.ஜனதா மட்டுமே 303 தொகுதிகளை தனதாக்கியது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 91 இடங்களை தனதாக்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 52 தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை (55) கொண்டிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதற்கு 3 உறுப்பினர்களை குறைவாக கொண்டிருக்கிறது.

கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்போது அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை அணுகி காங்கிரஸ் வலியுறுத்திய போதும் பலன் கிடைக்கவில்லை. அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டறிந்த மகாஜன் காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவராக உள்ளார். மத்திய அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளின் நியமனங்கள் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பா.ஜனதா அரசு அவரை அழைத்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை கொடுக்கவில்லை.

இம்முறை பா.ஜனதா கடந்த தேர்தலில் வென்றதைவிடவும் அதிகமாக வென்றுள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்குமா? என்பது கேள்விக்குரியது.

மேலும் செய்திகள்