மக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
மக்களவை தேர்தலில் படுதோல்வி சந்தித்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது.
புதுடெல்லி,
மக்களவைத் பொதுத்தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது. மத்தியில் ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், 350 மக்களவைத் தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தன் வசப்படுத்தி, அமோக வெற்றி பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியடைந்த பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிரிதி ராணி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வீழ்த்தினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துகளை பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்; தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார். இந்த சூழலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.