மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி
மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார்.
சிந்த்வாரா,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வாகவில்லை. இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து பா.ஜ.க.வின் விவேக் பன்டி சாஹு போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், சாஹுவை 25 ஆயிரத்து 837 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கமல்நாத் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோன்று கமல்நாத்தின் மகன் நகுல் நாத் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க.வின் நாதன்சஹா கவரேட்டி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில், 37 ஆயிரத்து 536 வாக்குகள் வித்தியாசத்தில் நகுல் நாத் வெற்றி பெற்றுள்ளார்.