தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசு உடையும்; மத்திய மந்திரி சதானந்த கவுடா பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உடைந்து விடும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் சதானந்த கவுடா. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் மந்திரியாக உள்ள இவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவின் முதல் மந்திரியாக குமாரசாமி நாளை மாலை வரையே நீடித்திடுவார். நாளை இரவு அவருக்கு தூக்கம் இருக்காது. நாளை மறுநாள் காலை அவர் பதவியில் இருந்து விலகி விடுவார்.
அதன்பின் ஒரு புதிய அரசு அமைப்பதற்கான விசயங்கள் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின் கர்நாடகாவில் கூட்டணி அரசின் நிலைத்தன்மை சீர்குலையும் என அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்து கணிப்புகளில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என கூறப்பட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி இந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளையே கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் கைப்பற்றியிருந்த 17 தொகுதிகளை விட இந்த தேர்தலில் பா.ஜ.க. கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என வெளியான தகவலால் ஆளும் கூட்டணி அரசு அச்சமடைந்துள்ளது. இது தவிர்த்து ஆபரேசன் தாமரை திட்டத்தின்படி, சில எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுக்கும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசின் நிலைத்தன்மை பாதிப்படையும் சூழல் எழுந்துள்ளது.