தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் பேச்சு
தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இத்தகவலை ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார். பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்குத்தான் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.
பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதா கூட்டணி 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. அதே சமயத்தில், பா.ஜனதாவும் 30 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பா.ஜனதா 4 முதல் 7 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரசும் தனியாக போட்டியிடுகிறது. வாக்குகள் பிரிவது பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என கூறப்படுகிறது.