பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சொல்கிறது

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறினார்.

Update: 2019-05-20 22:45 GMT

கொல்கத்தா, 

இந்தியாவில் 3–வது பெரிய மாநிலமாக மேற்குவங்காளம் திகழ்கிறது. உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகளும், மராட்டியத்தில் 48 தொகுதிகளும், மேற்குவங்காளத்தில் 42 தொகுதிகளும் உள்ளன. மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) மத்தியில் அடுத்த அரசை அமைப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறிவந்தது.

இந்நிலையில் வெளியான கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் மோடியே பிரதமராவார் என்றும், மேற்கு வங்காளத்திலும் பா.ஜனதாவுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தன. இதுபற்றி கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி, ‘இது வெறும் வதந்தி’ என்று கூறினார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்காக பயன்படுத்தும் இது ஒரு மோசடி சூதாட்டம் என்றும் அவர் கூறினார்.

டி.எம்.சி. பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, ‘‘இந்த கருத்து கணிப்புகளை எங்கள் கட்சி நம்பவில்லை. பலமுறை கணிப்புகள் உண்மைக்கு பொருந்தாமல் போயுள்ளது. தொகுதிவாரியான எங்கள் கட்சி ஆய்வு அறிக்கையின்படி மாநிலத்தில் எங்கள் கட்சியே இந்த முறையும் வெற்றிபெறும்’’ என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், ‘‘நாங்கள் தேர்தலுக்கு பின்னரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். எங்கள் கணிப்புப்படி எதிர்க்கட்சிகள் அடங்கிய அணி அடுத்த ஆட்சியை அமைக்கும். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை’’ என்றார்.

அதேசமயம் மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் கூறும்போது, ‘‘தேர்தல் கருத்து கணிப்பு வெளியான பின்னர் டி.எம்.சி. தோல்வி அடைவது தெரிந்துவிட்டது. ஆனாலும் மம்தா பானர்ஜி தான் அடுத்த பிரதமர் என்ற கனவில் இருந்து அவர்கள் விடுபடவில்லை. அந்த கனவை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் டி.எம்.சி. அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது’’ என்றார்.

மேலும் செய்திகள்