"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்
பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது.
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். கோவில் அருகே உள்ள குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். இரவிலும் அங்கு தங்கினார். கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர் கேதார்நாத் சென்றுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கேதார்நாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கம்பீரமான மலைகள்! கேதார்நாத் செல்லும் வழியில் எடுத்த புகைப்படங்கள் என சில புகைப்படங்களையும் பதிவிட்டார். மோடியின் கேதார்நாத் பயணத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேதார்நாத் பயணத்தை முடித்ததும் இன்று பத்ரிநாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடியின் ஒவ்வொரு அசைவையும் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார்நாத் சென்ற பிரதமர் மோடியின் செயல் விதிமுறை மீறல் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையே முடிந்துவிட்டது. ஆனால் பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகிறது. இது ஒட்டுமொத்த தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும்.
கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து, மக்களிடமும், ஊடகங்களிடமும் பேசியுள்ளார். இது ஒட்டுமொத்தமாக விதிகளை மீறும் செயலாகும். விதிமுறைகளுக்கு மாறானது. பிரதமர் மோடி ஒவ்வொரு நிமிடம் செய்யும் செயலும் உள்நோக்கத்துடன் மக்களை பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊடகங்களால் ஒளிபரப்பப்படுகிறது. மோடி பேசும் போது அவருக்கு பின்னால் இருந்து திட்டமிட்டு மோடி, மோடி என கோஷம் எழுப்பப்படுகிறது.
இவையனைத்தும் வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் திட்டமிட்டு செய்யப்படுபவை. இதில் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் இருப்பது மிகவும் வேதனையானது. ஒட்டுமொத்த தேர்தல் விதிமுறை மீறல் நடக்கும் போது ஜனநாயகத்தின் மிகப்பெரிய அமைப்பான தேர்தல் ஆணையம் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு இருக்கிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு மோடியின் பேச்சு தொடர்பான ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மூடத்தனமான, நியாயமற்ற பிரச்சாரம் தார்மீக ரீதியாக தவறாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.