இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

Update: 2019-05-19 06:19 GMT
புதுடெல்லி,

இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அரசை உருவாக்க தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை சில முறை சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து நேற்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணி அரசை அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அவருடன் ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி ஏற்கனவே, “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்த அரசை அமைப்பதற்கான வியூகம் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார்.

பின்னர் சந்திரபாபு நாயுடு இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இதுதொடர்பாக பேசினார்.

மாலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு அங்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை தனித்தனியாக அவர்கள் வீடுகளில் சந்தித்து பேசினார். 

இந்நிலையில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் டெல்லியில் இன்று 2-வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை  சந்திரபாபு நாயுடு சந்தித்து மீண்டும் ஆலோசனை நடத்தினார். ராகுல்காந்தியுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு தற்போது சரத்பவாரை சந்தித்து பேசினார்.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் சூழலில் ராகுல்காந்தியுடன் சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. 

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி பயணத்தை தடுப்பதற்கான யுக்திகள் குறித்து ராகுல்காந்தியுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 
தேசிய தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்