நாடாளுமன்ற தேர்தல்: நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

நாடாளுமன்றத் தேர்தலின் போது பறக்கும் படையின் சோதனையில் நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-05-18 15:32 GMT

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல இடங்களிலும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு  நாடு முழுவதும் சுமார் 3,500 கோடி மதிப்புக்கு பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.950 கோடி சிக்கியது.

தமிழகத்தில் 227 கோடியே 95 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 3,113 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் மதுபானங்கள், போதை பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.950 கோடியே 12 லட்சமாகும். இதற்கு அடுத்தப்படியாக குஜராத் மற்றும் டெல்லியில் அதிகளவு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 447 கோடியே 74 லட்சம் ஆகும். இதில் 839 கோடியே 26 லட்சம் ரொக்கப்பணம் ஆகும். ரூ.293 கோடியே 60 லட்சம் மதிப்புக்கு மதுபானங்கள், ரூ.1,269 கோடியே 63 லட்சம் மதிப்புக்கு போதை பொருட்கள், ரூ.986 கோடியே 73 லட்சம் மதிப்புக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், ரூ.58 கோடியே 53 லட்சம் மதிப்புக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்கள் உள்ளிட்டவையும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் பல ஆவணங்களை சமர்பித்த பின்னர் திரும்பவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்