‘பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி குறித்து `டைம்’ பத்திரிகை கட்டுரை பாரதீய ஜனதா கண்டனம்

பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-18 11:30 GMT
பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது.  மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள மோடி, டைம் பத்திரிகை ஒரு வெளிநாட்டு பத்திரிகை. அதில் கட்டுரை எழுதியவரும் தான் பாகிஸ்தானை  சேர்ந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறி உள்ளார். அதன் நம்பகத்தன்மைக்கு இது ஒன்றே போதும் என பதிலளித்தார்.

`டைம்’ பத்திரிகையின் கட்டுரை குறித்து   கட்சியின் தேசிய அறிக்கை தயாரிப்பு துணைக் குழு உறுப்பினர் கருணா கோபால் கூறியதாவது: 

பிரதமர் மோடியை பிரித்தாளும் தலைவர் என திரித்து கூறி பிரசுரமான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அவர் பிரிவினைவாதி அல்ல; ஒன்றுபடுத்துபவர், ஒருங்கிணைப்பாளர், நல்லிணக்கவாதி. அவரது ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களின் விமானம், ரயில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறைகள் மேம்பட்டுள்ளன. 

மோடி அரசின் ஜன் தன் யோஜனா, உஜ்வாலா, முத்ரா, சுவாச் பாரத் திட்டங்களின் மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர். இப்படிப்பட்டவரை பிரித்தாளுபவர் என்று எப்படி கூறலாம்?. அவரது அணுகுமுறையினால் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவரை முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அவரை ஏற்றுள்ளனர். ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே அவரைப் பற்றி இதுபோன்று எழுதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்