நான் ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை: கெஜ்ரிவாலை தாக்கிய நபர் வருத்தம்

நான் ஏன் அப்படி செய்தேன் என தெரியவில்லை என்று கெஜ்ரிவாலை தாக்கிய நபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-10 05:05 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் கடந்த மே 4-ம் தேதி திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, அங்கு வந்த  சுரேஷ் என்பவர், யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சித் தொண்டர்கள் கெஜ்ரிவால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து சுரேஷை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். விசாரணையில், கட்சித் தலைவர்களின் அணுகுமுறையால் மிகுந்த அதிருப்தி அடைந்து கெஜ்ரிவாலை அவர் தாக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுரேஷ், "சிறையில் இருந்த போது தன் தவறை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அன்று ஏன் அப்படி நடந்து கொண்டேன் என எனக்கு தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. 

என்னை யாரும் தூண்டிவிடவும் இல்லை. இச்சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு. நான் போலீஸ் காவலில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. போலீசார் என்னிடம் ஒன்றை தான் கூறினார்கள். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தான். அதனை நான் உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்" என கூறினார். 

மேலும் செய்திகள்