எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து என்று வேட்பாளர் அலறல் -ஆட்சியர் மறுப்பு
எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து நேரிட்டுள்ளது என்ற வேட்பாளரின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் விநோதமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
எலியால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆபத்து நேரிட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 18–ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.