காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஸ்மிருதி இரானி...!

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்.

Update: 2019-05-09 10:11 GMT
2019 தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது தலைவர்கள் மற்ற கட்சிகளின் செயல்பாடு தொடர்பாக பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்புவதில் கவனம் செலுத்துவார்கள். காங்கிரசை வசைப்பாடும் வகையில் பிரதமர் மோடி, பா.ஜனதா தொண்டர்களிடம் கேள்வியை எழுப்புவார். அதில் திறன்படவும் கேள்விகளை எழுப்புவார். இதுபோன்று செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசிடம் பா.ஜனதா ஆட்சியை பறிக்கொடுத்தது. காங்கிரஸ் வாக்குறுதிகளில் முக்கியமானது விவசாயக் கடன் தள்ளுபடி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதனை செயல்படுத்த தொடங்கியது. இருப்பினும் முழுமையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் காங்கிரசை விமர்சனம் செய்ய வேண்டும் என ஸ்மிருதி இரானி அசோக் நகரில் (மத்திய பிரதேசம்) நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களை நோக்கி, “தேர்தலின் போது நாங்கள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் எனக் கூறினார்கள். அவர்கள் செய்தார்களா? உங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் ஆமாம்... எங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கோஷமிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்மிருதி இரானி அடுத்த கேள்வியை எழுப்ப தயக்கம் காட்டினார். இந்த வீடியோவை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரை விமர்சனம் செய்து இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. ஸ்மிருதி இரானி ஏற்கனவே பிரியங்காவை விமர்சனம் செய்வதாக கூறி எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டார். 

பிரியங்கா அமேதியில் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடியை சிறுவர்கள் திருடன் என கோஷமிட்டனர். இதனால் பிரியங்கா வாயடைத்து நின்றார். இதுபோன்று பேசக்கூடாது என பிரியங்கா சிறுவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். இதில் கட்டிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஸ்மிருதி இரானி, கண்டனம் தெரிவித்தார். பின்னர் அது நீங்கள் கட்டிங் செய்த வீடியோ, நான் குழந்தைகள் இப்படி பேசக்கூடாது என அட்வைஸ்தான் கூறினேன் என பிரியங்கா பதிலடி கொடுத்தார். டுவிட்டர்வாசிகளும் ஸ்மிருதி இரானியை விமர்சனம் செய்தனர். 

மேலும் செய்திகள்