பானி புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் மூடல்
ஒடிசாவில் பானி புயல் கரையை கடக்க உள்ளதால் புவனேஸ்வர் விமான நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுகிறது.
புதுடெல்லி,
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் படிப்படியாக பலம் பெற்று ஒடிசா கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் 3-ம் தேதி (நாளை) மதியம் ஒடிசா மாநிலம், கோபால்பூர் - சாந்த்பலி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ஓடிசா தலைநகர் புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு விமான சேவைகள் எதுவும் இருக்காது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்; நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.