நீங்க பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு சாபமிட்டிருக்கலாமே? சாத்விக்கு காங்கிரஸ் கேள்வி
நீங்க பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு சாபமிட்டிருக்கலாமே? சாத்விக்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாசிக் மாவட்டம் மலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மலேகான் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு சாத்வியை கைது செய்த மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமந்த் கர்கரே மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது எதிர்த்துபோராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்தார். சாத்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், ஹேமந்த் கர்கரேவை விமர்சனம் செய்தார்.
சாத்வி பேசுகையில், மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்கரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். என்னை படுமோசமாக, கடுமையாக நடத்தினார். நான் அப்போதே அவரிடம் நீங்கள் அழிந்து போவீர்கள் என்றும் அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன். அதுதான் 2011 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் மரணம் அடைந்தார் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பின்னர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போபாலில் சாத்விக்கு எதிராக களமிறங்கியுள்ள காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சாபமிட்டிருக்கலாமே? எனக் கேள்வியை எழுப்பியுள்ளார். அப்படி சாபமிட்டிருந்தால் துல்லிய தாக்குதல் நடத்த வேண்டிய தேவையிருந்து இருக்காதே எனவும் கேலியாக பேசியுள்ளார்.
மேலும் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் சகோதரர்களே. “இந்துக்கள் அனைவரும் ஆபத்தில் உள்ளனர் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் ஒன்றை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன், இந்த தேசம் 500 ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் ஆளப்பட்டுள்ளது. அப்போது எந்தஒரு மதத்திற்கும் தீங்கு விளைவிக்கவில்லை. இப்போது மதத்தை விற்பனை செய்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.