தேர்தல் சின்னத்தின் கீழ் பா.ஜ.க.வின் பெயர்; தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார்

தேர்தல் சின்னத்தின் கீழ் பா.ஜ.க.வின் பெயர் இடம் பெற்றுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. #lotussymbol

Update: 2019-04-28 04:52 GMT
புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 11ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் சின்னத்தின் கீழ் பா.ஜ.க.வின் பெயர் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன.  இதற்காக எதிர்க்கட்சியினர் அடங்கிய குழு ஒன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவை சந்தித்தனர்.

அவர்கள், சின்னத்தின் கீழ் உள்ள பா.ஜ.க.வின் பெயர் நீக்கப்பட வேண்டும்.  அல்லது பிற கட்சிகளின் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

எனினும், மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, கடந்த 2013ம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. அணுகி, தங்களது கட்சி சின்னம் மிக மெல்லிய அளவில் உள்ளது.  அதனால் அதனை அடர்த்தியாக்க வேண்டும் என தெரிவித்தது.  அவர்கள் வேண்டுகோளின்படி, தாமரையின் வெளிப்புறம் சற்று அடர்த்தியாக்கப்பட்டது.  தாமரை சின்னத்தின் கீழ் நீர் இருப்பது போன்று சேர்க்கப்பட்டது.

இந்த நீர் இருக்கும் வரிகள் எப் மற்றும் பி என்ற ஆங்கில எழுத்துகள் போல் தெரிகின்றன.  ஆனால் அவை பா.ஜ.க. என்ற எழுத்துகள் இல்லை என கூறினார்.  தொடர்ந்து, இந்த சின்னம் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறும்பொழுது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில், கட்சி சின்னத்தின் கீழ் பா.ஜ.க. என்ற எழுத்துகள் உள்ளன.  எந்த கட்சியும் தங்களது கட்சி பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது என கூறினார்.

சின்னத்தின் கீழ் உள்ள அடையாளங்கள் எந்த கட்சியையும் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்து உள்ள தேர்தல் ஆணையம் ஆனது, வாக்கு சீட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்