தேர்தல் விதிகளை மீறும் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம்; ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது என ப. சிதம்பரம் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, தேர்தல் ஆணையம் பாரபட்சமுடன் செயல்படுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறும் பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என கூறினார்.
பிரதமரின் பேரணிகளுக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு செலவு செய்யப்படுகிறது. அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து தேர்தல் ஆணையம் தவறி விட்டது என கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டார். அவர் கூறும்பொழுது, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு வந்திறங்கிய விமானத்தில் பெட்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
அந்த பெட்டியில் நிச்சயம் மாம்பழங்கள் இல்லை. வேறு பொருட்கள் இருந்துள்ளன. தேர்தல் ஆணையம் இதனை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.
பெட்டியில் ரூ.15 கோடி பணம் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுவது பற்றிய நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரபு, எனது சட்டை பையில் ரூ.15 கூட இல்லை. இதில், ரூ.15 கோடி என்ற கேள்விக்கு இடமேது? என கூறினார்.