காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
சமஸ்திபூர்,
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் சிக்கியபோது இந்நாட்டிற்கு காவலாளியாக (சவுகிடார்) இருப்பேன் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன். நானும் ஊழல் செய்ய மாட்டேன். இந்த தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்றார்.
பிரதமர் மோடி காவலாளியாக இருப்பேன் என்று கூறியதை மையப்படுத்தி அவ்வப்போது காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. ரபேல் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் இந்த தேசத்தின் காவலாளியே ஒரு திருடன் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காவலாளி என்பதை திருடன் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து டுவிட்டரிலும் பிரசாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 11ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்து வரும் தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரின் சமஸ்திபூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டார்.
இந்த பேரணியில் கூடியிருந்த கூட்டத்தினர் முன் பேசிய ராகுல், காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூறியபடி இருந்துள்ளார். இதனை தொடர்ந்து ராகுல் மற்றும் தேஜஸ்வி ஆகிய இருவரின் மீதும் ஆரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.