மோடிக்கு ரூ.2½ கோடி சொத்து பிரமாண பத்திரத்தில் தகவல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று தனது வேட்புமனுவை அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்புமனுவுடன் சொத்து விவரம், கல்வித்தகுதி, குற்ற வழக்குகள் தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அந்த பிரமாண பத்திரத்தின்படி பிரதமர் மோடிக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வீட்டுமனை
இந்த சொத்து பற்றிய விவரம் வருமாறு:-
* பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளன.
* குஜராத்தில் காந்தி நகரில் செக்டார் 1-ல் 3,531 சதுர அடி வீட்டு மனை உள்ளது. அதில் உள்ள ஒரு வீட்டுடன் சேர்த்து அதன் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.
* வங்கிகளில் ரூ.1 கோடியே 27 லட்சம் ‘பிக்சட் டெபாசிட்’ (நிலைத்த வைப்பு) உள்ளது. கையில் உள்ள ரொக்கம் ரூ.38 ஆயிரத்து 750. வங்கியில் சேமிப்புக்கணக்கில் இருப்பு ரூ.4,143.
* வரி சேமிப்பு முதலீடு வகையில், உள்கட்டமைப்பு பத்திரங்களில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். தேசிய சேமிப்பு பத்திரத்தில் (என்.எஸ்.சி.) ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் முதலீடு செய்திருக்கிறார். எல்.ஐ.சி.யில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் காப்பீடு பத்திரங்கள் வைத்துள்ளார்.
கல்வித்தகுதி
* ஆபரணங்கள் வகையில் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம். பிரதமர் மோடி வருமானத்துக்கான ஆதாரமாக அரசிடம் இருந்து பெறுகிற சம்பளத்தையும், வங்கி சேமிப்பு வட்டியையும் குறிப்பிட்டுள்ளார்.
* பிரதமர் மோடி 1967-ல் எஸ்.எஸ்.எல்.சி. (குஜராத் கல்வி வாரியம்) தேர்ச்சி பெற்றார். 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் கலைப்பாட பிரிவில் பட்டம் பெற்றார். 1983-ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.
மனைவி
மனைவி யசோதா பென் என குறிப்பிட்டுள்ளார்.
மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 65 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். இப்போது அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகி இருக்கிறது.
மோடிக்கு எதிராக கிரிமினல் வழக்குகளோ, கடன் பாக்கிகளோ இல்லை என பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.