தேர்தல் பிரசார கூட்டத்தில் ‘ராகுல்’ என்ற சிறுவனை மேடைக்கு அழைத்து பேசிய ராகுல் காந்தி பீகாரில் ருசிகர சம்பவம்

பீகாரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட ‘ராகுல்’ என்ற சிறுவனை ராகுல் காந்தி மேடைக்கு அழைத்து பேசிய ருசிகர சம்பவம் நடந்தது.

Update: 2019-04-26 22:30 GMT
சமஸ்திப்பூர்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பீகாரின் சமஸ்திப்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், வேலையில்லா திண்டாட்டம் குறித்து விரிவாக உரையாற்றினார். குறிப்பாக, ‘பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) யால் பொருளாதாரம் சரிந்ததே, வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணம்’ என்று கூறினார்.

இவ்வாறு உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதே, டி-சர்ட் அணிந்து கூட்டத்தினர் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை அழைத்தார். பின்னர் மேடையில் இருந்தவாறே அவனது பெயரை கேட்டார். அதற்கு அந்த சிறுவன், தனது பெயர் ‘ராகுல்’ என்று பதிலளித்தான். இதைக்கேட்டதும் கூட்டத்தினர் கரங்களை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கூட்டணி தலைவர்கள் வியப்பு

இதனால் மகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்தி, அந்த சிறுவனை மேடைக்கு அழைத்தார். உடனே சிறுவனும் உற்சாகமாக மேடைக்கு சென்றான். அவனைப் பார்த்ததும் தனது உரையை நிறுத்திய ராகுல் காந்தி, அவனுக்கு வணக்கம் கூறினார். பதிலுக்கு வணக்கம் கூறிய அந்த சிறுவனை மேடையில் இருந்த தலைவர்களுக்கு ராகுல் காந்தி அறிமுகம் செய்து வைத்தார்.

இதைப்பார்த்து கூட்டத்தினர் அனைவரும் மீண்டும் கரகோஷம் எழுப்பி ராகுல் காந்தியை பாராட்டினர். மேடையில் அமர்ந்திருந்த ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் உபேந்திர குஷ்வாகா உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் ராகுல் காந்தியின் இந்த செயலை பார்த்து வியந்தனர்.

22 லட்சம் காலியிடங்கள்

பின்னர் தனது உரையை தொடர்ந்த ராகுல் காந்தி, ‘நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்க, அரசின் பல்வேறு துறைகளில் 22 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைப்போல பஞ்சாயத்துகளில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த பணியிடங்களை இந்த ‘ராகுலை’ போன்ற இளைஞர்களுக்கு வழங்க நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்.

இதைக்கேட்ட கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது. ராகுல் காந்தியின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த கூட்டத்துக்கு அவர் தாமதமாகத்தான் வந்திருந்தார். இதனால் சில மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு, ராகுல், மற்றும் ராகுல் காந்தியால் மேடையில் நிகழ்ந்த இந்த ருசிகர சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்