மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை மீண்டும் அஜய் ராயை களம் இறக்குகிறது, காங்கிரஸ்
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை. அங்கு அஜய் ராயை காங்கிரஸ் மீண்டும் களம் இறக்குகிறது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திரமோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்று இந்த முறையும், உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில்தான் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) அவர் தாக்கல் செய்கிறார்.
மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி யாரை களம் இறக்கப்போகிறது என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.
இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலியில் மார்ச் 28-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, அந்தக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடியபோது, அவர்கள் அவர் ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் ”ஏன், வாரணாசியில் போட்டியிடக்கூடாதா?” என கேள்வி எழுப்பி, அரசியல் அரங்கை அதிர வைத்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை வாரணாசி தொகுதியில் நிறுத்தினால் போட்டியிட தயார் எனவும் சொல்லி வந்தார்.
இதன்மூலம் அவர் வாரணாசியில் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த எதிர்பார்ப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
பிரியங்கா போட்டி இல்லை
வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை என்பது நேற்று உறுதியானது.
அந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெறும் 75 ஆயிரத்து 614 ஓட்டுகளை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜய் ராய் (வயது 49) மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.
யார் இந்த அஜய்ராய்?
அஜய் ராய் ஆரம்பத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், 4 முறை பாரதீய ஜனதா கட்சி சார்பில் உத்தரபிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்காததால் சமாஜ்வாடி கட்சிக்கு தாவினார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் அதே ஆண்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார்.
மே மாதம் 19-ந் தேதி தேர்தலை சந்திக்கிற வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சாலினி யாதவ் என்ற பெண்ணை வேட்பாளராக அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
வாரணாசி தொகுதியையும் சேர்த்து, இந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 424 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
வாரணாசி தொகுதி
2014 தேர்தல் முடிவு
பதிவான வாக்குகள் 10,30,685
நரேந்திர மோடி (பா.ஜ.) 5,81,022
கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) 2,09,238
அஜய்ராய் (காங்கிரஸ்) 75,614
விஜய் பிரகாஷ் (பகுஜன்) 60,579
கைலாஷ் சவுராசியா (சமாஜ்வாடி) 45,291