4 சட்டசபை தொகுதிகளோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மே 19-ந் தேதி தேர்தல் நடத்த வேண்டும் தலைமை தேர்தல் கமிஷனரிடம் ஏ.சி.சண்முகம் மனு
4 சட்டசபை தொகுதிகளோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் மே 19-ந் தேதி தேர்தல் நடத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏ.சி. சண்முகம் மனு கொடுத்துள்ளார்.
புதுடெல்லி,
தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவை சந்தித்து நேற்று ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்தின் வீடு, அவருடைய நெருங்கிய நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினார். அதனை தேர்தல் கமிஷன் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
தேர்தல் ரத்து
மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பினையும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்துக்கு அனுப்பியது. இதற்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததோடு, கடந்த 18-ந்தேதி நடைபெற இருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.
நீதி வழங்க வேண்டும்
என்னுடைய மனுவை பரிசீலித்து, 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் மே 19-ந்தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பற்றி புதிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் ஜனநாயகமே கேலிக் கூத்தாகி விடும். எனவே 4 சட்டசபை தொகுதிகளோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு நீதி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.