நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி
நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை என்று இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வருகிற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த பிரசாரத்துக்கு மத்தியில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவரை பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் பேட்டி கண்டார். “நான் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி தெரிந்து கொள்வதை விட நரேந்திர மோடி என்ற மனிதரைப் பற்றித்தான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லி நடிகர் அக்ஷய் குமார் பேட்டியை தொடங்கினார்.
இது பேட்டி என்பதை விட மனம் திறந்த கலந்துரையாடலாக அமைந்தது.
மாம்பழம் வாங்க வசதி இல்லை
அரசியலுக்கு அப்பால் பல சுவையான, நெகிழ்ச்சியான, மகிழ்வான தருணங்களை மோடி நினைவு கூர்ந்தார். அப்போது அவர் அக்ஷய் குமாரிடம் கூறியவற்றில் இருந்து ஒரு தொகுப்பு இது:-
நான் மாம்பழம் விரும்பிச்சாப்பிடுவேன். எனக்கு மாம்பழம் என்றால் ரொம்பப்பிடிக்கும். குஜராத்தில் நாங்கள் மாம்பழ திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் நான் சிறுவனாக இருந்து வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் மாம்பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதற்கு எங்களுக்கு வசதி கிடையாது. ஆனால் மாமரத்தில் இருந்து மாம்பழத்தை பறித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பிரதமர் ஆவேன் என...
நான் இந்த நாட்டுக்கு பிரதமர் ஆவேன் என ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.
ஒரு சாதாரண மனிதர் அப்படியெல்லாம் நினைப்பது இல்லை. அரசியல் குடும்ப பின்னணியில் இருந்து வருகிறவர்களுக்கு வேண்டுமானால் அந்த ஆசை இருக்கலாம்.
என் குடும்பப்பின்னணி எப்படிப்பட்டது என்றால், எனக்கு ஒரு சாதாரண வேலை கிடைத்தாலே என் அம்மா அதில் மகிழ்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினருக்கு எல்லாம் இனிப்பு வழங்குவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்தக் காலத்தில் கிராமத்துக்கு வெளியே நாங்கள் பார்த்ததே கிடையாது.
நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைத்தது இல்லை.
நான் சாமியாராக வேண்டும் அல்லது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்றுதான் விரும்பினேன்.
வங்கி கணக்கு முடக்கம்
நான் வங்கியில் ஒரு கணக்கு வைத்துக்கொண்டிருந்தது கிடையாது.
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த நாளில், தேனா வங்கியில் இருந்து எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் எங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி தந்தனர். ஆனால் என்னிடம் கணக்கில் சேமிக்க பணம் கிடையாது. இதை வங்கியில் கண்டுபிடித்து என் கணக்கை முடக்கி விட்டனர்.
32 வருடங்கள் கழித்து, நான் சிறுவனாக இருந்த காலம்தொட்டு வங்கிக்கணக்கு இருந்து வந்ததை அவர்கள் சொன்னார்கள்.
நான் முதல்-மந்திரி ஆனபோது சம்பளம், வங்கிக்கணக்கில் தான் போடப்பட்டது. நான் அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விட விரும்பினேன். ஆனால் அதிகாரிகள், எனக்கு எதிராக வழக்குகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றுக்காக பணம் தேவைப்படும் என்றனர். ஆனால் என் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.21 லட்சத்தை தேவைப்படுகிற மக்களிடம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்.
கடைசியில் எனது அலுவலக உதவியாளர், டிரைவர் மகள்களின் படிப்பு செலவுக்காக ரூ.21 லட்சத்தை கொடுத்து விட்டேன்.
டீ சாப்பிடும் வழக்கம்
வழக்கமாக தினமும் காலையில் 5 மணிக்கு சர்க்கரையின்றி டீ சாப்பிடுவேன். மாலை 6 மணிக்கும் டீ சாப்பிடுவேன். இது எனக்கு பழகிப்போய் விட்டது.
என் இளமைக்காலத்தில் நான் தீபாவளி பண்டிகை எல்லாம் கொண்டாடியது கிடையாது.
யாரும் இல்லாத காட்டுக்கு 5 நாட்கள் போய் விடுவது வழக்கம். அங்கு தண்ணீர் மட்டும்தான் இருக்கும். மரத்துக்கு அடியில் கூட தங்கி இருக்கிறேன். ரேடியோ, பேனா, காகிதம், புத்தகம் எதையும் எடுத்துச் சென்றது கிடையாது. டி.வி. அந்த காலத்தில் கிடையாது.
என்னை நான் சந்திக்கத்தான் அந்தப்பயணம். அது எனக்கு ஒரு பலத்தை தந்தது. இப்போது அது என்னால் முடியாது.
வாழ்க்கை பற்றி சொன்னவர்
என் குழந்தைப் பருவத்தில் நான் பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் படித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக நூலகம் செல்வேன்.
எனது ஊரில் ஒரு பள்ளிக்கூட முதல்வர் இருந்தார். நான் அவரை சந்திக்க போவேன். பெரியவர்களை நான் சந்திப்பதற்கு மிரள்வதில்லை. அவர் என்னை மிகவும் நேசித்தார். அவர் வாழ்க்கையைப்பற்றி எனக்கு நிறைய சொன்னார். அதன்பின்னர் நான் இமயமலைக்கு போனேன்.
கைக்கடிகாரம் அணியும் பாணி
நான் கைக்கடிகாரத்தை உள்நோக்கி அணியும் பாணியை பின்பற்றுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நான் நிறைய பேரை சந்திக்க வேண்டியதிருக்கிறது. அந்த நேரத்தில் நான் நேரத்தை பார்ப்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள நான் விரும்புவதில்லை.
உங்களை ஒருவரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறபோது நீங்கள் கைக்கடிகாரத்தை பார்த்தால், அது எதிரே உள்ளவர் விடைபெற்று போய் விட வேண்டும் என்று விரும்புவதின் அறிகுறி. இது அவமதிப்பாகி விடும். நான் மரியாதையை பராமரிக்கத்தான் விரும்புகிறேன்.
‘மீம்’ பிடிக்கும்
நான் டுவிட்டரை பார்ப்பது உண்டு. அதன்வழியாக வெளியுலகைப் பற்றிய நிறைய தகவல்கள் எனக்கு கிடைக்கின்றன.
சொல்லப்போனால் நான் உங்கள் (அக்ஷய் குமார்) டுவிட்டர் பக்கத்தை பார்க்கிறேன். டுவிங்கிள் கன்னா (அக்ஷய்குமார் மனைவி) டுவிட்டரைக்கூட பார்க்கிறேன்.
மீம் பார்ப்பது உண்டு. அது பிடிக்கும். மீம் போடுகிறவர்களின் படைப்பாற்றலை கண்டு நான் மகிழ்கிறேன். சாதாரண மக்களின் திறமையை சமூக ஊடகங்கள் எனக்கு காட்டுகின்றன.
ஆனால் ஒரு சிலர் கோபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுமென்றே செயல்படுவதையும் பார்க்கிறேன். நீங்கள் அதற்கு பதில் அளிக்காதபோது, நாம் செய்த வேலையெல்லாம் வீணாகிப்போய்விட்டதே என அவர்கள் நினைப்பார்கள்.
கோபப்பட மாட்டேன்
நான் கோபப்படுவதே இல்லை என அறிகிறபோது மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மகிழ்ச்சியும், கோபமும் வாழ்வின் அங்கங்கள்தான். இந்த உணர்வுகளை ஒவ்வொருவரும் கடந்து வருவது உண்டு.
என் வாழ்வின் முக்கிய கட்டமான 18-22 வயதில் நான் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதில்தான் கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நல்லவற்றை நோக்கி நாம் எப்படி கவனத்தை திருப்பி நடைபோடுவது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை விட்டுவிட வேண்டும். என் அலுவலக உதவியாளர் முதல் முதன்மைச் செயலாளர் வரை யாரிடமும் நான் கோபத்தை வெளிப்படுத்தியதே இல்லை.
சினிமா பார்ப்பது உண்டா?
நான் சினிமா பார்ப்பது உண்டா என்று கேட்கிறீர்கள்.
எங்கள் கிராமத்தில் ஒரு திரையரங்கு இருந்தது. எனக்கு தசரத் என்றொரு நண்பர் இருந்தார். அவரது தந்தை திரையரங்குக்கு வெளியே அவித்த கொண்டைக்கடலை விற்பார். அவர் எங்களை திரையரங்குக்கு உள்ளே அழைத்துச் சென்று விடுவார். எனவே இலவசமாக உள்ளே போவோம். படம் பார்ப்போம்.
பின்னாளில் வாழ்க்கைப் பாதை திசை மாறியது. சினிமா பார்க்க நேரம் கிடையாது.
நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அமிதாப்பச்சன் என்னைப் பார்க்க வந்தார். அவர் தனது ‘பா’ படத்தை நான் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அவருடன் போய் அந்தப் படத்தைப் பார்த்தேன். பின்னர் அனுபம் கெர்ரும் நானும் ‘வெட்னஸ்டே’ படம் பார்த்தோம். அது பயங்கரவாதத்தை பற்றிய படம்.
நான் தலைமை ஆசிரியரா?
நான் ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியர் மாதிரி என நினைப்பதாக சொல்கிறீர்கள்.
கண்டிப்புடன் இருப்பது என்பது வேறு. நான் கண்டிப்பானவன். ஒழுங்கானவன். ஆனால் நான் எனது வேலையை செய்து முடிப்பதற்காக யாரையும் ஒரு போதும் அவமதிக்க மாட்டேன். மாறாக அவரை ஊக்குவிப்பேன். இந்த வழியில் நானும் கற்றுக்கொள்கிறேன். அதே நேரம் கற்பிக்கவும் செய்கிறேன்.
உடை வாங்கி அனுப்பும் மம்தா
எதிர்க்கட்சிகளிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதை நான் சொன்னால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவீர்கள்.
மம்தா தீதிக்கும் (மம்தா பானர்ஜி), எனக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. இப்போதும் அவர் ஒன்றிரண்டு குர்தாக்களை ஒவ்வொரு வருடமும் எனக்கு வாங்கி அனுப்புகிறார். இதேபோன்றுதான் எனக்கு அவர் பெங்கால் இனிப்பு வகைகளை அனுப்புகிறார்.
வங்காளதேசம் சென்றிருந்தபோது அந்த நாட்டின் பிரதமர் சேக் ஹசீனாவிடம் நான் பெங்கால் இனிப்புகள் பற்றி பேசினேன். அதில் இருந்து இப்போதும் அவர் வருடத்துக்கு 3, 4 முறை பெங்கால் இனிப்புகளை டாக்காவில் இருந்து அனுப்புகிறார்.
இதுபற்றி மம்தா தீதிக்கும் தெரிய வந்திருக்கிறது. அவரும் வருடத்துக்கு ஒரு முறை பெங்காலி இனிப்புகளை எனக்கு வாங்கி அனுப்புகிறார்.
குலாம்நபி ஆசாத் நட்பு
நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, நானும், குலாம்நபி ஆசாத்தும் (காங்கிரஸ் தலைவர்) நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, நீங்கள் இருவரும் எப்படி ஒன்றாக போய் வருகிறீர்கள்? நீங்களும் குலாம்நபி ஆசாத்தும் எப்படி நண்பர்களாக இருக்க முடியும் என பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஏனென்றால் நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவன்.
அப்போது பத்திரிகையாளர்களுக்கு குலாம்நபி ஆசாத் ஒரு நல்ல பதிலைச் சொன்னார். எங்களுக்கு இடையே குடும்ப உறவு உண்டு. அதை நீங்கள் வெளியே பார்க்க முடியாது என்று அவர் சொன்னார். நீங்கள் வெளியே பார்ப்பது எல்லாம் உண்மை இல்லை. நாங்கள் எல்லாரும் ஒரே குடும்பம்.
ஒபாமா கேட்கும் கேள்வி
ஒபாமா எனது சிறந்த நண்பர். நான் ஒபாமாவை எப்போது சந்தித்தாலும் அவர் என்னிடம் ஒரே விஷயத்தைத்தான் கேட்பார். தினமும் எப்படி உங்களால் 3 மணி நேரம் மட்டுமே உறங்கி சமாளிக்க முடிகிறது என்று கேட்பார். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்றும் கேட்பார்.
ஒவ்வொரு முறையும், என்னிடம் அவர் கூடுதல் நேரம் உறங்க தொடங்கி விட்டீர்களா, இல்லையா என்று கேட்பார். நான் ஓய்வு பெற்ற பின்னர்தான் 3, 4 மணி நேரத்துக்கு கூடுதலாக உறங்குவதற்கு நேரம் கண்டு பிடிக்க வேண்டும்.
அம்மா பாசம்
நான் நாடோடி போல அலைந்து திரிபவனாக இருந்தேன். என் கேள்விகளுக்கு எல்லாம் நானே விடை கண்டுபிடித்தேன்.
சின்னஞ்சிறு பருவம் முதலே நான் சுயமாக இருந்தேன். அந்த சுயத்தன்மைதான், என்னைப் பற்று இல்லாத உணர்வுக்கு வழிநடத்தியது. பின்னாளில் நான் என் அம்மாவை என்னுடன் இருக்குமாறு அழைத்தேன். அவரோ கிராமத்தில்தான் இருக்க விரும்புகிறார். என்னாலும் அவருடன் செலவழிக்க நேரம் இல்லை.
எனக்கு எப்போதுமே என் அம்மாதான் பணம் தந்திருக்கிறார். அம்மா இன்னும் எனக்கு பணம் அனுப்புகிறார். அவர் என்னிடம் ஒரு போதும் பணம் எதிர்பார்த்தது கிடையாது. எனவே நான் என் சம்பளத்தில் வீட்டுக்கு எதுவும் அனுப்புவதில்லை. இதற்காக எனக்கு என் அம்மா மீது எனக்கு அன்பு இல்லை என்று கருதிவிடாதீர்கள்.
நாடுதான் குடும்பம்
இந்த நாட்டையே நான் எனது குடும்பம் ஆக்கிக்கொண்டு விட்டேன். என் குடும்பத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கவே விரும்புகிறேன்.
எனக்கு ஆயுர்வேத மருத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டு. நான் அப்படிப்பட்ட கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்து விட்டேன். விலை உயர்ந்த மருந்துகள் எல்லாம் எப்படி வேலை செய்யும் என்பதுகூட எனக்கு தெரியாது. நான் சூடான தண்ணீர்தான் குடிக்கிறேன். ஜலதோஷம் பிடித்தால் நான் எதுவும் சாப்பிடாமல் இருக்கத்தான் முயற்சிப்பேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.