நாடாளுமன்றத்துக்கு 3வது கட்டமாக 117 தொகுதிகளில் தேர்தல்: 66 சதவீத வாக்குப்பதிவு - குஜராத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்

நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவானது. குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

Update: 2019-04-24 00:15 GMT
புதுடெல்லி,

உலகின் ஒட்டுமொத்த பார்வையை கவர்ந்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

ஏப்ரல் 11 மற்றும் 18-ந் தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 15 மாநிலங்களில் 117 தொகுதிகள், நேற்று மூன்றாவது கட்ட தேர்தலை சந்தித்தன.

குஜராத் (26), கேரளா (20), கோவா (2) ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக அத்தனை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

அசாமில் 4, பீகாரில் 5, சத்தீஷ்காரில் 7, கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் தலா 14, ஒடிசாவில் 6, உத்தரபிரதேசத்தில் 10, மேற்கு வங்காளத்தில் 5, காஷ்மீர், திரிபுரா, தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 18 கோடியே 85 லட்சத்து 9 ஆயிரத்து 156 வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்.

ஒடிசா மாநிலத்தில் 6 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 42 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், குஜராத் மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவாவில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

இந்த மூன்றாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா (காந்திநகர்), காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி (வயநாடு), சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் (மெயின்புரி), பாரதீய ஜனதா கட்சியில் சமீபத்தில் சேர்ந்த நடிகை ஜெயபிரதா (ராம்பூர்), மத்திய மந்திரி சந்தோஷ் கங்குவார் (பரேலி) காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (குல்பர்கா), முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் (திருவனந்தபுரம்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் அடங்குவர்.

மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி (பிலிப்பிட்), தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாராமதி) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மொத்தம் 1,640 வேட்பாளர் களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கு வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு வசதியாக 2 லட்சத்து 10 ஆயிரத்து 770 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாகவே நடந்தது. பெரிய அளவில் வன்முறைகள் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி, ஆமதாபாத்தில் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு திறந்த ஜீப்பில் வந்து வாக்களித்தார். அவர் வாக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து கூறும்போது, “பயங்கரவாதத்தின் ஆயுதம் ஐ.இ.டி. (சக்திவாய்ந்த வெடிகுண்டு), ஜன நாயகத்தின் பலம் ஓட்டர்ஸ் ஐ.டி. (வாக்காளர் அடையாள அட்டை)” என குறிப்பிட்டார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, மனைவி சோனலுடன் வந்து ஆமதாபாத்தில் வாக்குப்பதிவு செய்தார். அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் அங்குள்ள ஷாப்பூர் இந்தி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். முதல்-மந்திரி விஜய் ரூபானி ராஜ்காட்டில் ஓட்டுப்பதிவு செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவ், தனது குடும்பத்தினருடன் சைபையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 5-வது முறையாக மெயின்புரியில் போட்டியிடும் முலாயம் சிங், இதுவே தனது கடைசி தேர்தல் என குறிப்பிட்டுள்ளார்.

முலாயம் சிங்கின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், மனைவி டிம்பிள் யாதவுடன் வந்து, சைபையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அவர் தனது தந்தை முலாயம் சிங் யாதவின் கால்களைத் தொட்டு ஆசி பெற்றார்.

ராம்பூரில் நடிகை ஜெயபிரதாவை எதிர்த்து களமிறங்கியுள்ள சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம்கான், “பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் பலன் அடையும் விதத்தில் 300-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் வேலை செய்யவில்லை” என புகார் கூறினார். தனது கூட்டணியின் ஆதரவாளர்களை வாக்களிப்பதில் இருந்து தடுத்தால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.

கேரள மாநிலத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் நாள் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 76.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் வாக்களித்தார்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா தான் போட்டியிடும் அனந்தநாக்கில் வாக்களித்தார். அங்கு வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. முதல் 4 மணி நேரத்தில் வெறும் 4.79 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த ஒரு தொகுதியில் தேர்தல் 3 கட்டங்களாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காள மாநிலம், முர்சிதாபாத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த மாநிலத்தில் தேர்தல் நடந்த 5 தொகுதிகளிலும் மோதல்கள் நடைபெற்றன. பலர் காயம் அடைந்தனர்.

மராட்டிய மாநிலம், அகமது நகர் தொகுதியில் ராலேகான்சித்தியில் 81 வயதான காந்தியவாதி அன்னா ஹசாரே வாக்குப்பதிவு செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, தனது குடும்பத்தினருடன் பாராமதியில் வாக்களித்தார். ஜல்னா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மாநில தலைவர் ராவ் சாகிப் தன்வீ, தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

அசாமில் தேர்தல் நடந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என புகார்கள் எழுந்தன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மனைவியுடன் வந்து கவுகாத்தி திஸ்பூர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

கோவாவில் கவர்னர் மிருதுளா சின்கா கணவருடனும், முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மனைவியுடனும் வந்து வாக்களித்தனர்.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் மாதேபுரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், அங்கு வாக்களித்தார்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஷ்கார் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்திருப்பது முக்கிய அம்சம்.

ஒட்டுமொத்தமாக 3-வது கட்ட தேர்தலில் 65.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் டெல்லியில் தெரிவித்தன. காஷ்மீரில் மிகக்குறைந்த அளவாக 13.61 சதவீத ஓட்டுகளே பதிவானதாக தெரிய வந்துள்ளது.

9 மாநிலங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் 29-ந் தேதி நான்காவது கட்ட தேர்தல் நடக்கிறது. அப்போது பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மராட்டியத்தில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. காஷ்மீரில் அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடக்கிறது.

7 கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 23-ந் தேதி நடக்கிறது. அன்று மாலை நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என தெரிய வந்து விடும்.

மேலும் செய்திகள்