4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டி சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு
4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு செய்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, டி.டி.வி. தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதன்பின் டி.டி.வி. தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அ.ம.மு.க.விற்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.
சமீபத்தில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பதவியேற்றார். இந்த நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மனு செய்துள்ளார்.