நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கர்நாடகாவை பொறுத்தவரை ஆந்திரா, மராட்டிய எல்லையோரத்தில் வரும் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 10 பெண்கள் உள்பட 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை சுமார் 2.43 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 28,022 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
மராட்டியத்தில் இன்றைய தேர்தலில் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக சுமார் 2.58 கோடி பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இன்றைய தேர்தலுக்காக மொத்தம் 28,691 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்பட மொத்தம் 370 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை சுமார் 4.51 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இங்கு மொத்தம் 51,851 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளில் மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோவா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இங்கு மொத்தம் 11,34,811 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்காக 1652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அசாமில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 4 தொகுதிகளில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மாநில மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. ஒருவரும் அடங்குவர். இந்த மாநிலத்தில் இன்றுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் ஒடிசாவில் இன்று 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 42 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 417 வேட்பாளர்கள் கோதாவில் இறங்கி உள்ளனர்.மொத்தம் 92.56 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இங்கு வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
இவ்வாறு 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுமாக மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.இன்றைய தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் ஏற்கனவே முடித்து உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் துணை ராணுவ வீரர்களுடன், அந்தந்த மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.