தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை கருத்து; ஜெயப்பிரதா, எம்.எல்.ஏ. அப்துல்லா ஆசம் மீது எப்.ஐ.ஆர். பதிவு
தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை கருத்துகளை தெரிவித்த முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதா மற்றும் எம்.எல்.ஏ. அப்துல்லா ஆசம் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராம்பூர்,
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பினை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனை அடுத்து 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஆசம் கானுக்கு தடை விதித்தது. இதன்பின் ஜெயப்பிரதா பேரணி ஒன்றில் பேசும்பொழுது, எனக்கு எதிரான ஆசம் கானின் பேச்சுகளை கவனத்தில் கொள்ளும்பொழுது, அவரது எக்ஸ் ரே போன்ற கண்கள் உங்களையும் உற்று நோக்கும் என்பதனை மாயாவதி அவர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும் என பேசினார்.
இதனால், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ஆசம் கான் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பேசியதற்காக ஜெயப்பிரதா மீது பிரிவு 171ஜியின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் ஆசம் கானின் மகன் மற்றும் எம்.எல்.ஏ.வான அப்துல்லா ஆசம் தேர்தல் கூட்டம் ஒன்றில் தனது தந்தைக்கு ஆதரவாக பேசும்பொழுது, எங்களுக்கு பஜ்ரங்பலி மற்றும் அலி வேண்டும். அனார்கலி அல்ல என கூறினார்.
தொடர்ந்து அவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட விவகாரத்தினை பற்றி பேசும்பொழுது, மோடி அரசில் நீதி அமைப்பு கூட அச்சுறுத்தலில் உள்ளது என கூறினார்.
இதன்பின் தேர்தல் அதிகாரி அஞ்சனை குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஜெயப்பிரதாவை அனார்கலி என கூறியதற்காக அப்துல்லா ஆசம் கான் மீது குற்றபத்திரிகை பதிவு செய்யப்படும். வீடியோ பதிவு சான்றை நாங்கள் போலீசாரிடம் அளித்துள்ளோம். இதற்கேற்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்படும் என கூறினார்.
அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்த ஜெயபிரதா, தந்தை போல் மகன். படித்த நபரான அப்துல்லாவிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. அவரது தந்தை என்னை அமராபலி என கூறினார். நீங்கள் என்னை அனார்கலி என கூறுகின்றீர். சமூக பெண்களை நீங்கள் எப்படி காண்கிறீர்கள் என்பது இதில் தெரிகிறது என கூறியுள்ளார்.