நாட்டை பிளவுபடுத்தி விட்டனர்: வாக்களித்த மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்து விட்டது - வயநாடு பிரசாரத்தில் பிரியங்கா குற்றச்சாட்டு

வாக்களித்த மக்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் செய்துவிட்டதாக வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரியங்கா குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-20 23:17 GMT
வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அங்கு நேற்று உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது.

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளருமான பிரியங்கா தனது சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக நேற்று வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் மனந்தவாடி பகுதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

இது என் நாடு. இந்த மலைகள் அனைத்தும் எனது நாடு. உத்தரபிரதேசத்தின் கோதுமை வயல்கள் எனது நாடு. தமிழகம் எனது நாடு. குஜராத்தும், வட மாநிலங்களும் கூட எனது நாடுதான். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா செய்தது எல்லாம் நாட்டை பிளவுபடுத்தியது மட்டுமே.

5 ஆண்டுகளுக்கு முன் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஒரு அரசு அமைந்தது. அந்த அரசு மீது நாட்டு மக்கள் அனைவரும் நம்பிக்கை வைத்தனர். ஆனால் அந்த அரசோ, தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.

ஆட்சிக்கு வருமுன், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்றார்கள், இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற உறுதி அளித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகோ, அந்த அதிகாரத்தை தங்களுக்கு யார் தந்தார்கள் என்பதையே மறந்துவிட்டார்கள். அனைத்துமே வெற்று வாக்குறுதிகள்தான்.

ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகளை ஏமாற்றியதன் மூலம் நாட்டை பாழாக்கிவிட்டார்கள். அதேநேரம் ஒரு சில தொழிலதிபர்களுக்கு செல்வம் சேருமாறு பார்த்துக்கொண்டார்கள். பணமதிப்பு நீக்கம் மூலம் நாட்டில் பொருளாதார குழப்பத்தை விளைவித்ததுடன், மதசார்பற்ற சான்றுகளை சிதைத்து நாட்டையும் பிளவுபடுத்தி விட்டனர்.

எனது சகோதரர் (ராகுல்), பெற்றோர் மற்றும் தாத்தா- பாட்டி ஆகியோரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு பா.ஜனதா நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால் முட்டாள்தனமான இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் திறனை ராகுல் காந்தி பெற்று இருக்கிறார். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

இதைத்தொடர்ந்து புல்லப்பள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றும்போது, ‘தற்போது ஆட்சியில் இருக்கும் அரசைப்போல பலவீனமான அரசை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. பிரதமர் மோடியை போல பலவீனமான பிரதமரை கண்டதில்லை. இதைவிட சிறந்த அரசை பெறுவதற்கு நீங்கள் தகுதி உடையவர்கள்’ என்று கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வெறும் காலோடு டெல்லியில் பேரணி நடத்திய விவசாயிகளிடம், அவர்களது குறைகளை கேட்காமல் திருப்பி அனுப்பியதாக பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிய பிரியங்கா, இதுதான் தேசியவாதமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் பிரசாரங்களில் பா.ஜனதா தலைவர்கள் பாகிஸ்தானை பற்றி பேசுவதாகவும், மக்களுக்காக தாங்கள் நிறைவேற்றியவை மற்றும் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் குறித்து பேசுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்