ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமேதி,
நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே. சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருக்கிறேன் என கூறி கொள்ளும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டில் வருமான வரி தாக்கல் செய்கிறார்.
அரசியல் சாசனத்தின் ஷரத்து 19ன் கீழ் மற்றும் இந்திய குடியுரிமை சட்டத்தின் பிரிவு 9ன்படி, ராகுல் காந்தி இந்திய குடிமகன் என்ற தகுதியை இழக்கிறார். இதனால் அவரது மக்களவை உறுப்பினர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி மத்திய அரசை அணுகும்படி சிங்கிடம் நீதிமன்றம் கேட்டு கொண்டது. சட்டப்படியான சிங்கின் கேள்விக்கு, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அமேதி தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிடும் துருப்லால், அப்சல், சுரேஷ் சந்திரா மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி வேட்பு மனு பரிசீலனையின்பொழுது, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தேவையான ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர். ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கவுசிக், இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் கேட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா வருகிற 22ந்தேதி காலை 10.30 மணியளவில் இந்த விவகாரம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.