பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, குடிமகனின் பயணம் என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.

Update: 2019-04-20 13:03 GMT
புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து உள்ளது.  தொடர்ந்து பிற தொகுதிகளுக்கான தேர்தலுக்காக கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாக இருந்தது.  இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.  இந்நிலையில், மோடி, ஒரு குடிமகனின் பயணம் என்ற தலைப்பிலான வலைதள தொடர் ஒன்றுக்கும் தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.

இந்த உத்தரவில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்பொழுது, எந்தவொரு அரசியல் அல்லது தனிநபருடன் தொடர்புடைய வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட காட்சிகள், தேர்தலில் இடையூறு ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட விசயங்கள் எதுவும், மின்னணு ஊடகம் உள்ளிட்டவற்றில் திரையிடப்பட கூடாது.

ஆணையத்தின் இந்த உத்தரவின்படி, நடப்பு மக்களவை தேர்தலில் ஓர் அரசியல் தலைவராக, பிரதமராக, நரேந்திர மோடி பற்றிய இந்த வலைதள தொடரில் உள்ள உண்மைகள் மற்றும் விசயங்களை கவனத்தில் கொண்டு இதற்கு தடை விதிக்கப்படுகிறது என ஆணையம் தெரிவித்து உள்ளது.  இந்த தடையானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.  தேர்தல் ஆணையம் படத்தினை பார்த்து விட்டு பதில் தெரிவிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22ந்தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்