தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை பயன்படுத்துகிறார்கள் மோடி பற்றி மாயாவதி விமர்சனம்
தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை பயன்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடியை மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜனதா, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு தயாராகி வருகிறது.
லக்னோவில் கூட்டணி கட்சியினருடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில வழிமுறைகளை மாயாவதி கூறினார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களால் தேசம் கவலை அடைந்துள்ளது. அங்கு நடந்ததை பா.ஜனதாவோ, பிரதமர் மோடியோ மறைக்க முடியாது. அரசியல் லாபத்திற்காக தேசியப் பாதுகாப்பு விஷயங்களை புறக்கணிக்கிறார்கள். காஷ்மீரில் நடந்ததை மறைக்கிறார்கள். ஒரே நாளில் இந்தியா விரோதப் போக்கை உருவாக்கி விட்டது.
இந்நிலையில் நாட்டுக்கு உறுதியான தலைமை தேவைப்படுகிறது. பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அதன்மூலம் அரசியல் ஆதாயங்களை பெற முயற்சிக்கிறார். தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள், தேசிய உணர்ச்சிகளை வைத்து மக்களை ஏமாற்றுவது மிகவும் விபரீதமான போக்காகும் என கூறியுள்ளார்.