சி.பி.ஐ. விசாரணை விவகாரத்தில் மோதல் : மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி போர்க்கோலம்
சி.பி.ஐ. விசாரணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள மம்தா பானர்ஜி, தொடர்ந்து 8-ந் தேதி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் மீது ரூ.2 ஆயிரம் கோடி மோசடி புகார் எழுந்தது.
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதுபோல், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றும் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரம் தொடர்பான முக்கியமான ஆவணங்கள் மாயமானது தொடர்பாக ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால், அவரை தலைமறைவானதாக சி.பி.ஐ. அறிவித்தது.
நேற்றுமுன்தினம் மாலையில், கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு 40-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அனுமதிக்காமல் மாநில போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில அதிகாரிகளை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இந்த மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் மெட்ரோ சினிமா முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள மம்தா பானர்ஜி, நேற்று 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கவே தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், வருகிற 8-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெற இருப்பதால் அதுவரை தனது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் அவர் பங்கேற்பதாக இருந்தது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால், அவர் நேரில் செல்லவில்லை. ‘பேஸ்புக் லைவ்’ மூலமாக அவரது உரை, அரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசை கடுமையாக தாக்கினார். மத்தியில் உள்ள மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு நிறுவனங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதாகவும் குற்றம்சாட்டினார். நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது போன்ற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜியுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்டோர் ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆதரவு தெரிவித்தனர்.
மம்தா பானர்ஜியின் தர்ணா நீடிப்பதால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் தலைவர்கள் மற்றும் மந்திரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில இடங்களில் பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. ஆங்காங்கே ரெயில் மறியலும் நடைபெற்றது. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
திரிணாமுல் காங்கிரசார் நடத்தும் போராட்டங்கள் காரணமாக மேற்கு வங்காளத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே, விசாரணை நடத்தச் சென்ற மாநில போலீஸ் அதிகாரிகளை தடுத்ததிலும், பணி நடத்தை விதி முறைகளை மீறியதிலும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்காள மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சி.பி.ஐ. அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு கவர்னர், இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசின் தலைமை செயலாளரையும், போலீஸ் டி.ஜி.பி.யையும் அழைத்து பேசியதாகவும், நிலைமைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
தர்ணா போராட்டம் நடந்து வரும் இடத்திலேயே மம்தாபானர்ஜி நேற்று மந்திரி சபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார். இத்தகவலை கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அறிக்கையில் உள்ள விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து கவர்னர் மாளிகை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், “சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையையும், மாநில அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும் தொகுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது” என்று தெரிவித்தன.
மற்றொரு புதிய திருப்பமாக, சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவாவுக்கு கொல்கத்தா போலீசார் நேற்று நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு இருந்தது. நோட்டீசை பங்கஜ் ஸ்ரீவஸ்தவா பெற்றுக் கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருவதால், பங்கஜ் ஸ்ரீவஸ்தவா டெல்லிக்கு விரைந்து உள்ளார்.