ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம் கட்ட முயற்சி: பா.ஜனதா மீது சிவசேனா குற்றச்சாட்டு

ஹெலிகாப்டர் பேர ஊழல் குற்றச்சாட்டு வழக்கு மூலம் நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, ராகுலை ஓரம்கட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுவதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2019-01-02 21:15 GMT
மும்பை,

மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பேரத்தில் குற்றம்சாட்டப்பட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது அவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பெயரை குறிப்பிட்டதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

5 மாநில இடைத்தேர்தல் நடந்தபோது இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை மத்திய அரசு துபாயில் இருந்து நாடு கடத்தி வந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அது குறித்து விமர்சித்து பேசினார். ஆனாலும் 5 மாநில தேர்தலில் தோல்வி மூலம் இந்த பிரச்சினையில் பா.ஜனதா தனது வாலில் தீ வைத்து கொண்டுவிட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் சோனியா காந்தி, ராகுல்காந்தியை மக்களிடம் இருந்து ஓரம் கட்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு கையில் எடுக்கப்பட்டு உள்ளது.

பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, விவசாயிகள் தற்கொலை, ராமர்கோவில் பிரச்சினைகளை புறம்தள்ளி, கிறிஸ்டியன் மைக்கேல் பெயரை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.

இவ்வாறு சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் செய்திகள்