சுனந்தா புஷ்கர் மரண வழக்கு விசாரணை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் பற்றிய வழக்கு விசாரணை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-01 09:47 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர். சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இவ்வழக்கில் சசி தரூர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.  இந்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் பற்றிய வழக்கு விசாரணைக்கு சசி தரூரின் வழக்கறிஞர் இன்று ஆஜராகவில்லை.  இதனால் இந்த வழக்கை நீதிபதிகள் டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்